ஏழை கையில் ஆட்சிச் சரடு

சமூக இயக்காற்றல் என்ற கோணத்தில் நாம் முன்வைக்கும் பதில். ஆற்றல் என்றால், சொன்னால் எடுபடும் தன்மை. நான் சொல்லுகிறேன் அது எடுபடுகிறது என்றால், நான் ஆணையிட்டால் அது நடக்கிறது என்றால் எனக்கு ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம்.
தளம் வேண்டும்
ஆனால் நான் "சொல்லுவது" என்றால் எனக்கு ஒரு தளம் வேண்டும். ஒரு பேசும் தளம் வேண்டும். ஒரு நபராவது எனக்குக் காது கொடுத்துக் கேட்கிற நிலைமை வேண்டும்.
திருவாளர் அடித்தளமனிதனும் பேசி, அவர் பேசுவது எடுபட வேண்டும் என்றால், அவருக்கும் ஒரு தளம், பேசும் தளம் வேண்டும்.
அவர் பேசி எடுபட்டது என்றால் அவரது பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்து விடும் அல்லவா? அந்தப் பேசும்தளம் அவருக்கு எட்டும் துரத்தில் இருக்க வேண்டும் அந்தத் தளம் அவரது கைப் பிடிக்குள் நிற்ப்பதாகவும் இருக்க வேண்டும். வழுக்கிப் போவதாகவோ, அவரது கைஅகலத்தை விடப் பெரிதாகவோ இருந்தால், அவருக்கு "பிடி" இருக்காது. அவர் முன்னேறிச் செல்ல முடியாது.
இந்த மாதிரியான பேசும் தளங்கள், பேசி தீர்மானிக்கும் தளங்கள், இன்று சமூக, பொருளாதார, அரசியல் தீர்மானங்களைப் பொறுத்த வரையில் அவர் கையில் இல்லை. இன்று அவர் மன்னராம். உடன் - மன்னராம். ஏனென்றால் நமக்கு மக்களாச்சி இருக்கிறதாம். ஆனால் அவர் பிச்சை எடுக்கிறாராம். இதைவிட பெரிய ஜோக்? அவர் மன்னர் என்றால் எப்படி இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்? அவரது பிரச்சினைகளுக்கு எப்போதோ தீர்வு வந்திருக்குமே!. அவர் மன்னர் என்றால் ஆற்றலோடு பேசுகிற தளங்கள் அவருக்கு இருந்திருக்குமே!.
இன்றைய மக்களாட்சி அவருக்கு அத்தகைய தளங்களைத் தரவில்லை.
சின்னதாக தளங்கள் வேண்டும்
இன்று அவருக்கு இருக்கிற தளங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை.
ஒன்று பாராளுமன்றத் தொகுதி என்கிற தளம், ஒரு மாவட்டத்தையே உள்ளடக்கும் அளவுக்கு மிகப் பெரிய தளம்
அதே போல சட்டமன்றத் தொகுதி என்கிற தளம், இதுவும் ஒர் ஒன்றியத்தை அல்லது தாலூகாவை உள்ளடக்கும் அளவுக்கு மிகப் பெரிய தளம்.
அவ்வளவு பெரிய தளங்களில் அவர் குரல் எங்கே எடுபடும்?
ஒரு தளம் எவ்வளவுக்கு பெரிதாக ஆகிறதோ, அந்த அளவுக்கு பெரிய குரல்களே எடுபடும். சின்னக்குரல்கள் எடுபடாமல் போய்விடும். பேச வாய்ப்பே இல்லை என்ற நிலைமை உருவாகிவிடும்.
ஒரு மாவட்டம் அளவுக்கான ஒரு பேசும்தளத்தில் பேசி எடுபடச் செய்ய சின்னக்குரல்களால் முடியுமா என்ன? அங்கே யார்தான் பேசி ஆதரவு திரட்ட முடியும்? பணம் படைத்தவர்களே.
இதுபோன்ற தளங்களில் இரண்டு பேர் வேட்பாளர்களாக நிற்பார்கள் என்று வைத்துக் கொள்வோமே. இரண்டு பேருமே ஏழைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போவது இல்லை என்று தெரிந்தாலும். ஒரு பக்கத்தில் சாத்தான் இன்னொரு பக்கத்தில் ஆழ்கடல் என்பது போல். ஏதாவது ஒரு பண சக்தியை அவன் தெரிந்து கொள்ள வேண்டிருக்கிறது. இப்படி பெரிய தளங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பெரிய குரல்கள் டெல்லியிலோ சென்னையிலோ பேசும்தளம் வைத்து தீர்மானங்கள் எடுத்தால் அவை பணக்காரார்களின் பிரச்சினைகளைத்தானே முதலில் தீர்க்க முயலும்?.
"பார்லிமெண்ட்" வேண்டும்
பேசும்தளம் என்பதை மூலச்சொல் அடிப்படையில் மொழி பெயர்த்தால் "பார்லிமமெண்ட்" என்று வரும். Parlare என்ற இலத்தீன் மூலச் சொல்லுக்கு "பேசுதல்" என்று அர்த்தம். சட்டமன்றமும் இதே வகையில் நமக்கு ஒரு "பார்லிமமெண்ட்" அங்கும் இதே கதி.
அடுத்து இந்த இரண்டு முக்கிய தளங்களளோடு அதிக தொடர்பில்லாமலேயே, ஒரு மூன்றாவது பேசும் தளம் உருவக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம சபா. இதுவும் திருவாளர் அடிமட்ட மனிதனை பொறுத்த வரையில் மிகப் பெரிய தளம். இங்கேயும் பேச்சு எடுபட வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ஒரு கீழ்மட்ட (lower middle class) நடுத்தர நபராகவாவது இருக்க வேண்டும். நமது திருவாளர் அடிமட்ட மனிதனின் குரல் எடுபட வேண்டும் என்றால் இன்னும் சின்னதான தளங்கள் தேவை.
அக்கம்பக்கத்து சபா வேண்டும்
பஞ்சாயத்துக்கு ஒரு கிராம சபா என்று அல்ல, வார்டுக்கு ஒரு சபா என்று மட்டுமல்ல, ஒவ்வொரு வார்டுக்கு உள்ளும் சின்னதான அக்கம்பக்கத்து சபாக்கள் தேவை. இந்த சபாக்கள் மூப்பது மூப்பது வீடுகளை கொண்டு அமையலாம். சின்ன தளமாக இருப்பதால் இங்கு கடைசி மனிதனுக்கும் கவனம் கிடைக்கும். அவன் பிரச்சினைகளும் முதன்மை பெறும். அடித்தளக் குரல்கள் அக்கம்பக்கத்து சபாக்களோடு. அக்கம்பக்கத்து பாராளுமன்றங்களோடு, நின்றுவிடக் கூடாது, மீதியுள்ள மேல்மட்ட அமைப்புகள் யாவும் திருவாளர் அடித்தள மனிதனின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். அதற்கு வழி செய்யும் வகையில் புது மாதிரி பாராளுமன்றங்கள் தேவை. அக்கம்பக்கத்து பாராளுமன்றங்களை கொண்டு, வார்டு / ஊர்ப்பாராளுமன்றப் அமைய வேண்டும் அடுத்து ஊர்ப்பாராளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்டு பஞ்சாயத்து பாராளுமன்றம். இன்னும் இதேபோல் ஒன்றியப் பாராளுமன்றங்கள், மாவட்ட பாராளுமன்றங்கள், மாநிலப் பாராளுமன்றங்கள், தேசிய பாராளுமன்றம் என வர வேண்டும். இப்படி உலகப் பாராளுமன்றம்கூட உருவாகலாம். ஒவ்வொரு மட்டத்திலும் அமையும் இப்பாராளுமன்றங்கள் அளவில் சின்னதாக, மகாத்மா காந்தி சொன்னது போல " முகத்துக்கு முகம் பார்த்துப் பேசக் கூடிய சமூகங்களா" இருந்தால், ஒவ்வொரு மட்டத்திலும் சின்னக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும், எடுபடும். இப்படி ஒவ்வொரு மட்டமும் சின்னச் சின்ன பேசும் தளங்களாக, பார்லிமமெண்ட்டுகளாக, ஆகும்போது, இன்னொரு வாய்ப்பு எளிதாகக் கைவரும். அதாவது, திருப்பி அழைக்கும் வாய்ப்பு.

 

Copyright © 2010 Neighbourhood Community Network. All rights reserved.

Designed by Prabhu International